August 28, 2015

தகடூர் மழவர் படைத்தலைவன் "பெரும்பாக்கன்"

முதலாம் தகடூர்ப் போரில் சேரமான் பெருஞ்சேரலிரும் பொறையோடு போரிட்டு அதியமான் நெடுமான் அஞ்சி வீர மரணம் எய்தினான். அதன் பின்னர் அதியமானின் மகன் "பொகுட் டெழினி" ஆட்சிபீடம் ஏறினான். அரசன்  பொகுட் டெழினியின் ஆட்சியில் படைமுதல்வனாக - படைத்தளபதியாக - அஞ்சா நெஞ்சம் கொண்ட போர்படைச் சிங்கமாக இருந்தவர் "பெரும்பாக்கன்" ஆவான்.

"அதியமானால் சிறப்பெய்திய பெரும்பாக்கன்" என்று நாச்சினார்க்கினியர்கூருவதினின்று நோக்கும் போது அதியமானின் போர்ப்படையில் பெரும்பாக்கன் களம் பல கண்ட வேங்கையாக இருந்திருக்க கூடும். அதியமானால் படைக்கல்வி பயிற்றுவிக்கப்பட்டவன். அதியமானால் போர்வியூகங்கள் அறிந்தவனாக உருவானவன், அதியமானிடம் போர்வீரனுக்குரிய அனைத்துச் சன்மானங்களைப் பெற்றவன். அதியமானிடம் அனைத்து உதவிகளை அரசு முறையில் "தண்டை"ப் பெற்றவன். அதியமானின் மகோன்னதமான காலத்தில் பெரும்பாக்கன் தகடூரின் சிங்கமாக உருவானான், உருவாக்கப்பட்டான்.

தகடூர் வரலாற்றில் தகடூரின் எழுச்சியின் இமயமாக அதியமான் விளங்குகிறான், தகடூரின் வீழ்ச்சியில் எழுச்சியின் இடிமேகமாக வெளிக்கிளம்பி தகடூர் மண்ணை காக்கப்போரிட்ட மாவீரன் பெரும்பாக்கன் என்பது தகடூரின் மாபெரும் வரலாறாகும்.

புறநானூறு, அகநானூறு, சங்கப்பாடலில் பெரும்பாக்கனை பற்றி வரலாற்று சான்று இல்லை. தகடூர் யாத்திரையில் தகடூர் கோட்டை முற்றுகை போரில் வீர இளைஞனை வருணிக்கும் பாடலுக்கு விளக்கமளிக்கும் போது தொல்காப்பிய உரையாசிரியர் நாச்சினார்க்கினியர் அதியமானால் சிறப்பெய்திய பெரும்பாக்கன் என்று குறிப்பிடுவதிலிருந்தே நமக்கு பெரும்பாக்கனை தெரிகிறது. பாடல்களில் பெரும்பாக்கன் என்ற சொல் இல்லை. தொல்காப்பியம் புறத்திணையியலுக்கு உரை எழுதியவர் ஆசிரியர் பாரத்துவாசி நாச்சினார்க்கினியர்தான் பெரும்பாக்கன் பெயரையும் மாவீரன் நெடுங்கோளன் பெயரையும் குறிக்கின்றனர். அவருக்கு மட்டுமே தகடூர் போர்நிலைக் குறிப்புகள் தெரிந்திருக்கிறது. அவர் தொல்காப்பிய புறத்திணையியல் 63 ஆம் பாடலில் "பொருளின் றுய்த்த பேராண் பக்கமும்" என்ற வரிக்கு "பகை வேந்தரை ஒரு பொருளாக மதியாது படையினைச் செலுத்தின பேராண்மை செய்யும் பகுதியும்" என்று பொருளாகும். இந்த வரிக்கு இலக்கணமாக- உதாரணமாக தகடூர்ப் பெரும்பாக்கனையே எடுத்துக்காட்டாகக் கொள்கிறார். உரையாசிரியர் கூற்றுப்படி பெரும்பாக்கன் படையை வழி நடத்தினவன் என்றாகிறது.

பெரும்பாக்கனின் ஆணழகு பெருவீரத்தன்மையை சேரப்புலவர் ஆசிரியர் அரிசில்கிழார் தகடூர் யாத்திரையில் பாடலாக இசைத்துள்ளார்.

நாச்சினார்க்கினியர் காட்டும் தகடூர் யாதிரைப்பாடல்:-


"மெய்ம்மலி மனத்தி னம்மெதிர் நின்றோ
னடர்வினைப் பொலிந்த சுடர்விடு பாண்டிற்
கையிகந் தமருந் தையணற் புரவித்
தளையவிழ் கண்ணி யிளையோன் சீறின்
விண்ணுயர் நெடுவரை வீழ்புயல் கடுப்பத்
தண்ணுறுங் கடாஅ முமிழ்ந்த வெண்கோட்
டண்ணல் யானை யெறித லொன்றோ
மெய்ம்மலி யுவகைய னம்மருங்கு வருதல்
கடியமை கள்ளுண் கைவல் காட்சி
துடிய னுண்க நோக்கிச் சிறிய
கொலைமொழி மின்னுச்சிதர்ந் தனையந்
வேறரித் திட்டு நகுதலு நகுமே"
- புலவர் அரிசில்கிழார் (தகடூர் யாத்திரை)

"இதிலிருந்து அதிகமானாற் சிறப்பெய்திய பெரும்பாக்கனை மதியாது சேரமான் முனைப்படை நின்றானைக்கண்டு அரிசில்கிழார் கூறியது" என்று நாச்சினார்க்கினியர் கூறுவதினின்றே 'பெரும்பாக்கனை" என்ற பெயரை அறிகிறோம். தகடூர் பெரும்பாக்கன் வரலாற்றை நமக்கு தந்தவர் நாச்சினார்க்கினியரே ஆகும்.

மேற்கண்ட பாடலில் புலவர் ஆசிரியர் அரிசில்கிழார் தன்னுடைய சேரமன்னன் சேரமான் பெருஞ்சேரலிரும் பொறைக்கு படைமுதல்வன் பெரும்பாக்கனைப்பற்றி கூறும் பாடலின் பொருளுரை இதோ;-

சேரமானே.!

நம் எதிரே நிற்கும் வாய்மை கொண்ட இளைஞன் இளமைப் பொலிவால் வீறுகொண்டவன்; ஒளிவிடும் தேரினை உடையவன்; வீரமிக்க எழில்மிக்க குதிரையுடையவன் அழகிய மாலையை அணிந்த இளையோன் சீறினால் உயரமான மலைச்சிகரத்தினின்று வீழ்கின்ற மழைநீர்போல் குளிர்ச்சிப் பொருந்திய மதநீரைப்பொழியும் வெண்தந்தங்களுடைய களிற்று யானையை கொள்ளுவது இயலாதோ? போர் என்னும் அச்சமேயன்றி மகிழ்ச்சிபொங்க நம்முன்னே வரும் வீரமறவன் கையில்வேல் தாங்கி நமது போர்முரசு கொட்டும் துடியனை பிறழ்ந்து நோக்கி தம்மை அலட்சியம் செய்துபோர் முகமாய் சிரிப்பாய் சிரிக்கும் இளைஞனை காண்!

மேலும் தொல்காப்பிய புறத்திணையியல் 63 ஆம் பாடல் உரைக்குறிப்பில்,

"வரு விசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமையானும்"

என்பதற்கு பொருள்: தன்படை நிலையாற்றாது பெயர்ந்தவழி விசையோடு வரும் பெருநீரைக் கல்லணை தாங்கனாற் போலத்தன் மேல்வரும் படையினைத்தானே தடுத்த பெருமையும் என்பதற்கு உதாரணமாக,

"கார்த்தரும் புள்ளனற் கண்ணஞசாக் காளைதன்
றார்ப்பற்றி யேர்தரு தோனோக்கித்- தார்ப்பின்னர்
ஞாட்பினுள் யானைக் கணநோக்கி யானைப்பின்
றோர்க்குழா நோக்கித்தன் மாநோக்கிக் - கூர்த்த
கணைவரவு நோக்கித்தன் வேனோக்கிப் பின்னைக்
கிணைவனை நோக்கி நகும்"
- புலவர் பொன்முடியார் (தகடூர் யாத்திரை)

என வரும் இது பொன்முடியார் ஆங்கவனைக்(பெரும்பாக்கன்) கண்டு கூறியது என்று தொல்காப்பிய உரையில் நாச்சினார்க்கினியர் குறிக்கின்றார்.

பெரும்பாக்கனைப் பற்றி பாடல்கூறும் பொன்முடியாரின் கருத்து:-


போர்க்களத்தில் பகைவனின் வேல்வீச்சுக்கு கண்சிமிட்டாத - கண் அஞ்சாத காளையாம் பெரும்பாக்கன் போர் யானையை நோக்கி யானைப்பின்னே இருக்கும் தேர்க்குழாம் படையை நோக்கி, தன்னுடைய போர்க்குதிரையை நோக்கி கூரிய எதிரியின் வேல் போர்க்களத்தில் எத்திக்கிலிருந்து தன்னை நோக்கி வரும் என நோக்கி, தன் கைவேலை நோக்கி பின் எதிர்க்கும் மன்னவனை நோக்கி சிரிக்கின்றான் துச்சமாக.

புறநானூற்றில் நமது புலவர் ஒளவையாரால் ஏற்றிப் போற்றி விண்ணளாவிப் புகழ்ந்து பெரும் புயலென வீரம் கொண்ட அதியமானை நமக்குக் காட்டப்படுகிறது. அப்படிப்பட்ட அதியமானின் இறுதிக் காலம் குற்றத்தன்மையுடையதாகி விட்டது. சேரமான் பெருஞ்சேரலிரும்பொறை படையெடுத்து வந்து இன்றைய அதியமான் கோட்டை முற்றுகையிட்ட நேரத்தில் பேராண்மைச் சிங்கமாக தகடூர் கோட்டையைவிட்டு வெளியே வந்து சேரமானை நேருக்கு நேர் போர்க்களத்தில் சந்தித்து போரிட்டு தகடூர் கோட்டையை காத்திருக்க வேண்டும், இல்லையென்றால் கோட்டை வெளிப்போரில் மாண்டிருக்க வேண்டும். அதுவே தகடூர் அதியமானின் மாண்புடைய வீர வாழ்வாக முடிந்திருக்க வேண்டும். அனால் இதற்கு மாறாக எதிரி படையோடு கோட்டைக்கு வெளியே வந்து தகடூர் கோட்டையை - நாட்டை கைப்பற்ற எக்காளமிட்டு கொக்கரித்து நிற்கும்போது எதிரியை போர்முகத்தில் சந்திக்காது, கோட்டையை விட்டு பேராண்மை சிங்கமாக ஒளி ஞாயிறன வெளியே வராமல் கோட்டைக்குள்ளே அதியமான் முடங்கிகிடந்தான் என்பது தகடூரின் மாபெரும் வீழ்ச்சியாகும். இது அதியனின் போர்க்குற்றத்தன்மையாகும்.

அதியமான் கோட்டை கோவில் (எ) சென்றாய சுவாமி 

ஆனால் இரண்டாம் தகடூர்ப்போரில் மன்னன் பொகுட் டெழினிக்கும் சேரமான் பெருஞ்சேரலிரும்பொறைக்கும் நடந்த போரில்  பொகுட் டெழினியின் போர்க்கள வீரதீரச்செயலை நாம் காண எந்த அகச்சான்றும் புறச்சான்றும் இல்லை, போரில் மாண்ட பொகுட் டெழினியின் அருமையை - பெருமையை எண்ணி எண்ணி சேரமானின் புலவர் அரிசில்கிழார் துக்கித்து இறங்கற்ப் பாடியுள்ளார் என்பது அறியக்கிடக்கிறது.

இரண்டாம் போரில் தகடூர் கோட்டையை விட்டு ஒளி ஞாயிறென - பேராண்மை சிங்கமாக - கோட்டையிடியென - சீறும் வரிப்புலியாய் - பாயும் தகடூர் வேங்கையாய் - பொகுட் டெழினியின் படை முதல்வன் பெரும்பாக்கன் மழவர் படையோடு புயலென வெளிக்கிளம்பி வந்து காவற்காட்டில் சேரமான் படையை எதிர் கொண்டான்; சேரமான் பெருஞ்சேரலிரும்பொறையை நேருக்கு நேர் தகடூர் கோட்டை வெளிப்போரில் சந்தித்தவன் பெரும்பாக்கன்.

இளைஞனாய் - களிற்று யானையையும் வீழ்த்தும் ஆற்றலுடையவனாய் வீரமாமுகத்தோடு சேரமானை ஒரு பொருளாக மதிக்காது துச்சமாக புன்னகை புரிந்தான். போர் முழக்கமிட்டான், அதியமானால் பொகுட் டெழினியால் , ஏற்பட்ட தகடூர் வீழ்ச்சிஎனும் பேரிருளில் ஓர் பேரொளியாய் படைமுதல்வன் பெரும்பாக்கன் களத்தில் சேரமானை எதிர்த்து போரிட்டான். தகடூர் தாயகத்திற்காக வீரமரணம் எய்தினான்.

தகடூர் போர்களில் களத்தில் சேரமானோடு உடன்வந்து போர்க்கள கட்சிகளை நேரில் கண்ட புலவர் ஆசிரியர் அர்சில்கிழாரும் புலவர் பொன்முடியாரும் தகடூர் கோட்டை அரண்சிறப்பையும் தகடூர் பெரும்பாக்கன் மற்றும் அவரது மழவர் படை விளைவித்த உலகமகா வீரத்தையும் கண்டு மெச்சி அவர்களை பற்றிப் பாடல்கள் புனைந்தனர். தகடூர் யாத்திரை பாடலில் தளபதி பெரும்பாக்கனைப் பற்றி பாடியவர்கள் அரிசில்கிழாரும் பொன்முடியாரும் ஆகும். ஆனால் சேர மரபினரின் வீரமாண்பை தெரிவிக்கும் புறப்பாடலான பதிற்றுப்பத்தில் புலவர் ஆசிரியர் அரிசில்கிழார் தகடூர் நாட்டின் வளத்தையும் தகடூர் நாட்டின் மழவர்களை -மறவர்களை - வெல்போர் ஆடவர்களை மட்டுமே குறித்துப்பாடல் புனைதுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

"வெல்போ ராடவர் மறம்புரிந்து காக்கும்
வில்பயி விறும்பிற் றகடூர் நூறி"
- அரிசில்கிழார் (பதிற்றுப்பத்து)

பதிற்றுப்பத்தில் "வெல் போராடவர் மறம்" நம்முள்ளத்தில் இரத்தத்தில் தகடூரின் வீரப்பேருனர்ச்சிக் கனலாய் எழுந்து விண்ணளாவி நிற்பதை நாம் உணர்கிறோம். தகடூரின் வெல்போராடவர்களை பெரும்பாக்கானே மாபெரும் தகடூரின் போர்சிங்கமானவான் என்பது வரலாறாகும். தகடூர் வெல்போராடவர்களை வழிநடத்தியவன் , தகடூர் கோட்டையை விட்டு அகழியைத் தாண்டி காவற்காட்டில் தன் படை மழவர்களோடு வெல்போராடவர்களோடு சேரமானை நேருக்கு நேர் சந்தித்த தகடூரின் பேராண்மை பெரும்பாக்கன் ஆவான்.

"அதோ கருந்தாடியுடைய அந்த அஞ்சா நெஞ்சன் தன் கையில் உள்ள வேலையும் நம்மையும் பார்த்து இறுமாப்புடன் சிரிக்கின்றான்"
- அரிசில்கிழார்.

'அந்த வீர இளைஞனால் வீறுமிக்க யானைகளைக்கூட வீழ்த்த முடியும் என்று தோன்றுகிறது".
- புலவர் பொன்முடியார்.

இதோடல்லாமல் வேறு சில புத்தங்களில் பெரும்பாக்கனை பற்றி புகழ்ந்துள்ளர்கள்.

தென்னாட்டு போர்கள் - பன்மொழி புலவர் க. அப்பா துரையார்
தருமபுரி வரலாறும் பிரகலாத சரித்திரமும் - ச. கிருஷ்ணமூர்த்தி
அதியமான் நெடுமான் அஞ்சி - ஜே. குலசேகரன் கவுண்டர்.
எரி அன்பு - தகடூரான் (எ) K.C. கிருஷ்ணன் கவுண்டர்

இந்த புத்தகங்களில் மேலும் விரிவாக மழவர் படைத் தலைவன் பெரும்பாக்கன் பற்றி அறியலாம்.


பாண்டியர்களின் படைத்தலைவன் - பழையன் மாறன்
சேரர்களின் படைத்தலைவன் - நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை

இவர்களை எல்லாம் ஒரு சேர எதிர்த்து போரிட்டு அழித்தான், தானும் போர்க்களத்தில் மாண்டான் மோகூர் பழையன்.

நன்னன் என்னும் மன்னனின் படைத்தலைவன் ஞிமிலியாவான், சேர படைத்தலைவன் கணையன் என்பவன் ஒருவன் இருந்தான். 12 ஆம் நூற்றாண்டு காலத்தில் ராஜராஜ சோழனோடு இலங்கை படையெடுப்பின் போது வீர வன்னிய படைத்தலைவர்கள் உடன் சென்று இலங்கையை வென்று கிழக்கு இலங்கையை தங்களின் வன்னிமைகளின் ஆட்சிபிரதேசமாக கொண்டார்கள். இலங்கையில் வெள்ளையரின் குடியேற்ற ஆட்சியாதிக்கதை எதிர்த்தவன் கடைசி இலங்கை தமிழ் மன்னன் குலசேகர வைரமுத்து என்னும் இயற்பெயர் கொண்ட பண்டார வன்னியன் ஆவான். இவர் வன்னியர் படைத்தலைவர்கள் மரபில் உதித்தவன் ஆவான்.

முதற் குலோத்தங்க சோழன் காலத்தில் ஒரிசா வடலிங்கம்வரை படையெடுத்துச் சென்று வாகை சூடியவன் ஆவான். உலகபுகழ் கலிங்கத்துப் பரணி கதாநாயகன் படைமுதல்வன் கருணாகர தொண்டைமான் ஆவான். இங்ஙனம் தமிழகத்தின் போர்ப்படைதலைவர்களின் வரலாற்றுக்கெல்லாம் அடிப்படையாகவும் எழுச்சியாகவும் இருப்பவன் தகடூர் நாட்டின் படைத்தலைவன் வன்னியமழவர் பெரும்பாக்கன் என்பது வரலாறாகும்.
- பெரும்பாக்கன்


பெரும்பாக்கன் பிறந்த ஊர்:-


அதகபாடி = அதிகமன்+பாடி. 

அதகபாடி ஊராட்சி தலைமியிடம். இந்த ஊராட்சியின் தலைவராக இருந்தவர் “பெரியமாக்கன்”. இவருடைய பெயர் தகடூர் அதியமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினி ஆட்சிக்காலத்து படை முதல்வனும், 2-ஆம் தகடூர் போரில் சேரமான் பெருஞ்சேரலிரும்பொறையை அதியமான் கோட்டை முன் காவற்காட்டில் நேருக்குநேர் எதிர்த்த மழவர் தடூர் சிங்கம் பெரியமாக்கன் பெயரே ஆகும். 

தகடூர் படைமுதல்வன் பெரும்மாக்கன் பிறந்த பழங்கால ஊரே அதகபாடி. பெரும்மாக்கன் வம்சாவளியிர் இன்று பெயர் மருவி “பெரிய மாக்கன் வீட்டார்” என்று அழைக்கின்றனர். மேலும் அதியமான் பாடி கிராமத்தில் பெரியமாக்கன் வம்சாவளியை – பரம்பரையை “மாக்கம் வீட்டார்’ என்று மரபு வழியாக அழைக்கபடுகிறது. 

பெரிய மாக்கன் வீட்டாரில் பிறக்கும் முதல் ஆண் குழந்தைக்கு பெரிய மாக்கன் என்றும் முறையே இரண்டாவது குழைந்தைக்கு சின்ன மாக்கன் என்றும், பெண் குழந்தைகளுக்கு மாக்கி என்றும் பெயர் சூட்டுவது வழக்கமாக இருந்து வருகிறது. பெரிய மாக்க வீட்டாரே பழங்காலத் தகடூரின் படைத்தலைவன் பெரும்மாக்கன் பிறந்த வீடாகும். 




தருமபுரி மாவட்டத்தில் பெரும்பாக்கன் பெயரில் உள்ள ஊர்கள்:- 

மாக்கனூர்:- 


பெரியமாக்கன் குடும்பத்திற்கு அதிகமான உறவுமுறைகள் இருப்பது இந்த "மாக்கனூர்" கிராமம் (மழவர்கள்) என்பது குறிப்பிடத்தக்கது.




01.09.2015 - ல் வந்த தினமலர் நாளிதழில் மாக்கனூர் கிராமத்தின் வரலாற்றை தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். 

பெயர் காரணம்:- 


தருமபுரியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த கிராமம். வீட்டிற்கு ஒன்று முதல் நான்கு ஆசிரியர்கள் உள்ளனர். கேட்பதற்கே ஆச்சிரியமாக உள்ளதல்லவா.. 

தகடூரை மண்ணை அப்போதைய மன்னன் அதியமான் ஆண்டபோது இம்மன்னனின் படையில் தளபதியாக இருந்தவர் பெருமாக்கன் இவர் இப்பகுதியில் தங்கியிருந்தார். இவர் பெயர் தான் நாளடைவில் மருவி மாக்கான் என்று அழைத்தும் பின் அது காலப்போக்கில் "மாக்கன் ஊர்" , மாக்கனூர் என்றழைக்கப்படுகிறது. 




 மேலும் சில தகவல்: https://www.facebook.com/darumapurimavattam/photos/a.632754576753082.1073741828.631117923583414/806844749344063/?type=1&theater

மேலும் இந்த கிராமத்தில் வீட்டுக்கொரு ஆசிரியர் உள்ளனர். தருமபுரி மாவட்டத்திலேயே "ஆசிரியர் கிராமம்" என்றழைக்கப்படுவது இந்த கிராமமே. திண்ணைப்பள்ளி முதல் நடுநிலைப்பள்ளி வரை என்ற தலைப்பில் கட்டுரை வந்துள்ளது அதை கீழே காண்க.! 



Click Here: http://www.newindianexpress.com/states/tamil_nadu/With-100-Literacy-Makkanoor-Village-has-Teacher-in-Every-Home/2013/12/12/article1941158.ece
மேலும் சுமார் 1000 ஆண்டுகாளாக கடைபிடித்து வரும் ஊர் கவுண்டர், மந்திரி கவுண்டர் மற்றும் கோல்கார கவுண்டர் என நிர்வகிக்கும் முறையை இன்றும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர். 

Click Here: http://www.frontline.in/static/html/fl2811/stories/20110603281109500.htm

பாடி:- 

அதகபாடி மற்றும் மாக்கனூர் கிராமத்தை தொடர்ந்து, அதியமான் படைமுதல்வன் பெரியமாக்கனின் அண்ணன், தம்பிகளும் மற்றும் சம்பந்திகளும் வாழும் கிராமம் தான் "பாடி". 



மாபெரும் பெருந்தலைவர் குட்டிக்கவுண்டர் பிறந்த ஊர். இந்த ஊர் அதியமானின் மழவர் போர்ப்படையினர் தங்கியிருந்த ஊர். இந்த கிராமமும் அதிகமான்பாடி வீடுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குட்டிக் கவுண்டரின் பேரன் தான் தருமபுரி மாவட்ட வன்னியர் சங்க தலைவரும் பாமக துணைத்தலைவருமான பாடி. செல்வம் ஆகும். 


திரு. பாடி செல்வம். 

மாக்கன் கொட்டாய்:- 


பாலக்கோடு ஜெர்தலாவ் ஊராட்சிக்கு உட்பட்ட "மாக்கன் கொட்டாய்" என்ற ஊர் உள்ளது. இது போலவே இதே தாலுகாவில் சீரியன அள்ளிக்கு அருகேயும் மாக்கன் கொட்டாய் (எ) சீராண்ட புரம் என்ற ஊர் உள்ளது.




*************************************************************************


குறுந்தொகையில் புலவர் பெரும்பாக்கனார்:-


சங்ககாலத் தமிழ் புலவர்களில் பெரும்பாக்கனார் என்னும் புலவர் ஒருவர் இருந்தார். இவர் பெரும்பாக்கன் என்னும் ஊரை சேர்ந்தவராக இருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். பெரும்பாக்கன் என்ற பெயரில் ஊர்கள் தமிழகத்தில் இருக்கின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில் "பெரும்பாக்கச்சீமை" என்பது ஒரு நாட்டுப்பகுதியாகும்.

"அம்ம வாழி தோழி புன்னை
அலங்குசினை யிருந்த அஞ்சிறை நாரை
உறுகழிச் சிறுமீன் முனையிற் செறுவிற்
கள்நாறு நெய்தல் கதிரோடு நயக்கும்
தண்ணத் துறைவற் காணின் முன்னின்று
கடிய கழறல் ஒம்புமதி தொடியோள்
இன்ன ளாகத் துறத்தல்
நும்மின் தகுமோ என்றனை துணிந்தே".
- புலவர் பெரும்பாக்கனார் (குறுந்தொகை - 296)

தோழி ஒன்று கூறுவன் கேட்பாயாக! புன்னை மரத்தினது அசைகின்ற கொம்பின்கண் இருந்த அழகியை சிறகுடைய நாரை மிக்க கழியிடத்தே சிறிய மீன்களை தின்று வெறுத்த தாயின் கழனிகளிடத்தே தேன்மணக்கும் நெயதற்பூவை நெற்கதிரோடே தின்ன விரும்புவதற்கு காரணமான குளிர்ந்த துறையுடைய தலைவனை அவன் கண்முன்னே நின்று துணிந்து வளையலையுடைய தலைவி இவ்வாறு ஆற்றாளுகும்படி அவளை பிரிந்து போதல் நுமக்கு தகுதியாகுமோ என்று இன்னோரன்ன கடிய சொற்களை கூறி இடித்துரைத்தலைப் பாதுகாப்பாயாக!

இப்பாடலை பாடிய புலவர் எங்கு வாழ்ந்தார் என்று தெரியவில்லை. அனால் மழவர் படைத்தலைவர் பெரும்பாக்கன் இல்லை. இவர்கள் இருவருமே வாழ்ந்துள்ளார்கள் என்று தெரிய வருகிறது.

*******************************XXXX*************************************


August 22, 2015

தகடூர் நாட்டின் பழக்க வழக்கங்கள்

தமிழரின் பொங்கல் நாளான உழவரின் திருநாளான பொங்கல் பண்டிகையை வேளாண் குடிகள் மிகவும் சிறப்பாக ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கொண்டடி வருகிறார்கள். பொங்கல் பண்டிகை உழவுக்கு கால்நடைகளை பயன்படுத்தும் விவசாய குடிகளுக்கேயுரிய பண்டிகையாகும். தைத்திங்களில் முதல் நாள் காப்பு கட்டும் நாளாக பூலாப்பூவு, வேப்பிலை, பண்ணை இலை மற்றும் மா இலை கலந்து கொத்து கொத்தாக வீட்டின் இறவானத்தில் செருகுவார். பின் மாட்டுக் கொட்டகைகளிலும் பில்(புல்) போர்களிலும் ஆடு மாடு கட்டும் பட்டிகளிலும் செருகுவர். வீடுகளுக்கு வெள்ளை அடித்து நன்றாக சுத்தம் செய்வார்கள். ஒட்டு தமிழர்களுக்கு இந்த பழக்கவழக்கங்கள் இருந்தாலும் தகடூர் நாட்டின் குடிகளுக்கு முக்கியமானதாகும்.



அம்சேரி:-

தகடூர் நாட்டில் உள்ள பெரும்பான்மை சமூகமான கவுண்டர்கள் (வன்னிய குல க்ஷத்ரியர்) இந்த நன்னாளில் பங்காளிகள் அனைவரும் ஒன்று கூடி பங்காளிகள் விழாவாக "அம்சேரி" செய்வார்கள். இதனை சிலர் நான்காம் நாள் கரிநாளிலும் செய்வார்கள். உரிமை உடையவர்கள் கூட்டுறவாக இருந்தால் தான் ஊர்காக்க முடியும், நாடு காக்கமுடியும் என்பதாலும் ஆண்டுக்கொருமுறை ஒருவரை ஒருவர் சந்தித்து ஓர் ரத்தத்தில் வந்தவர்கள் பாசம் காட்டி அளவளாவிக் கொள்ளும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

அம்சேரி விழாவில் பங்காளிகள் அம்மனுக்கு ஆடு வெட்டுதல்

அம்சேரி விழாவில் அம்மனுக்கு பூசை செய்தல். 

பொருள்:


அம் - அழகு , நலன்
சேரி- ஊர்

ஊரின் நலனுக்கு பங்காளிகளிடையே ஒற்றுமை வலியுறுத்துவதே இவ் விழாவின் நோக்கமாகும். ஓர் புனிதமான இடத்தை தேர்வு செய்து பொங்கல் வைத்து ஆட்டை பலி கொடுத்து பூசை செய்வதே அம்சேரியாகும்.

இரண்டாம் நாள் கதிரானை போற்றும் நாள். பூமியில் தழைக்கும் ஓர் உயிர்க்கெல்லாம் துணைக்கரம் தந்து உயிராய் விளங்கும் அண்டப் பேரொளியாய் விளங்கும் கதிரவனை தமிழர்கள் தொன்று தொட்டு போற்றி வணங்கி வருகிறார்கள். கதிரவனை வடமொழியாளர்கள் சங்கரன் என்கிறார்கள். நாம் பெரும் பொங்கல் என்பதை வடமொழியாளர்கள் "சங்கராந்தி" என்றும்

பெரும்பொங்கல் அன்று மாலை நிலத்தை அகழ்ந்து அடுப்பிட்டு பெரும்பானை புதுச்சட்டிகளை வைத்து அதிலே பாலிட்டு, நீரிட்டு, புத்தரசியிட்டு பொங்கச் செய்து, புதுப்பானையில் பொங்கல் பொங்கிவர மகிழ் வெய்தி, பின் கதிரவனுக்கு பூசணிஇலையிலும் வாழை இலையிலும் படையலிட்டு கதிரவனை போற்றி வணங்குவார்கள். பின் படையலில் உள்ள சோற்றில் வெல்லம், தயிர், பூசணி குழம்பு இட்டு நன்றாக பிசைந்து கையில் எடுத்து உருண்டை உருண்டையாக தன் தாய் தந்தையாருக்கு - மனையாள் மக்களுக்கு உற்ற சகோதரர் சகோதரிகளுக்கு ஊர் உறவினர்களுக்கு கையில் கொடுத்து அங்கேயே உண்பிக்க செய்து பேரின்பமடைவார்கள்.

மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல், மாடு இல்லையென்றால் மனிதன் இல்லை என்பது நம் தமிழர் மொழி, மாடு என்பதற்கு செல்வம் என்பது பொருளாகும். மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளை நீர் நிலைகளுக்கு ஓட்டிச் சென்று உடலெல்லாம் நீரிட்டு நன்றாக தெய்த்து குளிப்பாட்டி இருப்பிடம் கொண்டு வந்து அதன் கொம்புகளை நன்றாக மழ மழவென சீவி தூய்மைப்படுத்தி வண்ணங்களை தீட்டி அழகிய பித்தளை குப்பிகளை மாட்டி ஓசை கிளம்பும் மணிகளை அதில் இணைத்து வண்ண வண்ண குஞ்சங்களை கட்டிவிடுவார்கள். மாடுகளை கழுத்தில் வேப்பிலை மாலைகளை கட்டி விடுவார்கள். புதிய மூக்கணாங் கயிறு போட்டு நல்ல வலுவான கயிறுகள் கொண்டு பிணைப்பார்கள். நிலத்தை அகழ்ந்து அடுப்பிட்டு புதுப்பானை புத்தரிசி பொங்கலிட்டு மாலை நேரம் வந்தவுடன் மாடுகளை களத்தினிலே வரிசையாக நிற்க வைத்துவிட்டு அருகம்புல் செருகிய சாணியால் செய்யப்பட சாமி உருவத்தின் முன் சாணியால் வடிவமைக்கப்பட்ட சாணிக் குளத்தில் மாட்டுக் கோமியம் இட்டு நிரப்புவார்கள். பிறகு பூசை நடக்கும். பொங்கல் படையலிட்டு ஊதுபத்தி கொளுத்தி தேங்காய் உடைத்து கற்பூரம் கொளுத்திவிட்டு சாம்பிராணியை மாடுகளுக்கு காட்டி "பொங்கலோ பொங்கல்" என்று இன்னிசை முழங்கி சிறிது சோறை நிலத்தில் இடுவர், நடப்பார், பின்னே செல்பவர் "பொலியோ! பொலியோ" என்று பின் பாட்டாக சொல்லி செல்வார். கையில் உள்ள பொங்கல் சோற்றை நிலத்தில் இடுவர். இது போன்று மும்முறை கால் நடைகளை வலம் வருவார்கள். பின் குடும்பத் தலைவன் குனிந்து படையலுக்கு முன்பாக இருக்கும் சாணி குளத்திளிருக்கும் கோமியத்தை நமக்கு உழைத்து உணவு எனும் அமிழ்தும் அளிக்கும் மாட்டை போற்றும் விதமாக வாய் வைத்து உறிஞ்சிக் குடிப்பான். பின் பொங்கல் சோறுண்டைகளை மாடுகளுக்கு கடினப்பட்டு வாயை திறந்து ஊட்டுவார்கள்.

நம் வாயிக்கு சோறளித்த மாடுகளுக்கு நன்றியாக தன் மாடுகளுக்கு சோறு ஊட்டுவான் என்பதே மாட்டுப் பொங்கலாகும். பின் உறவினர்களுக்கு மாட்டுப் பொங்கல் சோற்றை வழங்கி மகிழ்வான். இவைகள் முடிந்து ஊர்களின் பொது மண்டு என்ற மரபு காலந்தொட்டு வரும் இடங்களுக்கு மாலை 6 மணியளவில் மாடுகளை இழுத்துச் சென்று ஊரார் மாடுகள் அனைத்தும் வரிசையாக நிறுத்தப்பட்டு பொதுப் பூசை செய்யப்பட்டு பின் மாடுகளை தம் இருப்பிடங்களுக்கு செல்லட்டமாக துள்ளி துள்ளி ஒட்டிக்கொண்டு மாடுகளோடு ஓடிச் செல்வார்கள். பொது மண்டில் மாடுகளை ஓட்டும் போது வேடிக்கை பார்க்க வந்த பெண்கள் மாடுகள் ஓடிச் சென்றவுடன் அங்கேயும் வழியிலேயும் மாடுகள் போட்டிருக்கும் மாட்டுச் சாணிகளை எடுத்து வந்து தாங்கள் இல்லங்களின் முன் வாயிலில் திஸ்டியும் பூதனங்களும் பேய்களும் வீட்டிற்கு வராமல் காக்கும் பொருட்டு சாணியால் சுவற்றில் ராகாசி என்னும் உருவத்தை எழுதி வைப்பார்கள். தகடூர் நாட்டு மக்களின் ஒரு சாரர் பெரும் பொங்கல் பெரும் பானை வைத்து கொண்டாடுவதும் மற்றொரு சாரார் மாட்டுப்பொங்கல் மாட்டுப்பானை வைத்து கொண்டாடுவதையும் இன்னும் சிலர் பெரும் பானையும் மாட்டுப் பானையும் இரண்டுமே வைத்துக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்ததக்கது.

தகடூர் நாட்டில் பொங்கல் வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னே ஊர்களில் கரிநாளில் கூளியாடவும், கோல் போடவும் திட்டமிடுவார்கள். கோல் என்பது சிலம்பு பயிற்சியாகும். ஊர்களில் அடலேறு இளைஞர்கள் இளம் மூங்கில் கோல்களை சந்தையில் வாங்கி வந்து தக்க பரம்பரை பரம்பரையாக கோல் பயிற்சி கலையின் விற்பன்னர்களான கோல் வாத்தியார்களை கொண்டு இரவில் சிலம்பு பயிற்சி பெறுவார்கள். தகடூர் நகரம் தமிழகத்திலேயே தலை சிறந்த சிலம்பு பயிற்சி வீரர்களை கொண்ட நகரமாகும். இது சங்க காலம் தொட்டே வருகிறது. உலக கராத்தே தமிழ்மணி என்பவர் தர்மபுரியிலும் தஞ்சாவூரிலும் சிலம்பு பயின்றே ஜப்பான் சென்று கராத்தே வீரர் ஆனார் என்று அவரது வரலாறு கூறுகிறது.

வருடா வருடம் கரிநாள் அன்று வன்னியர்களின் சிலம்பாட்டம் நடைபெறும். 

கூளி ஆட்டம்:- 


பொங்கல் நான்காம் நாள் தகடூர் நாட்டில் கரிநாள் கொண்டாட்டம் என்பது கூளி(எருது) ஆட்டமாகும். தகடூர் என்பது இன்றைய அளே தருமபுரி ஆகும். தகடூர் கோட்டை என்பது இன்றைய அதியமான் கோட்டை ஊராகும். தகடூர் நாட்டில் கூளி ஆட்டம் என்பது மாபெரும் சிறப்பாகும். விருபாட்சிபுரம் ஆக்ரகாரத்  தெரு என்னும் ஊரின் தனித் தமிழ் பெயர் காலப்போக்கில் மறைந்தன. இவ்வூர் 12 ஊர் நாட்டானை கொண்டதாகும். இவ்வூரில் தென்புறம் நவடப் பள்ளிகளும் வடபுறம் ஓலைப் பள்ளிகளும் வாழ்கின்றனர். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையில் நவடப் பள்ளிகள் சார்பில் ஒரு கூளி ஆட்டமும் ஒலைப்பள்ளிகள் சார்பில் ஒரு கூளியாட்டமும் நடைபெறும். இதன் தலைமையான நாட்டான் கொட்டாயிலிருந்து ஒரு கூளி ஆட்டமும் தருமபுரி நகர கடைவீதிகளில் ஆடி வந்து சாலை விநாயகர் கோவில் வீதியில் குன் செட்டி குலம் பொது மண்டில் கூளி மாடுகளை இழுத்து வந்து கூளியாடி விளையாட்டு வேடிக்கை காட்டி மூன்று சுற்று மண்டில் சுற்றி விட்டு வெளியே வந்து கடை வீதி வழியாக ஊர் வந்தடையும்.



பாப்பாரப்பட்டி அருகே உள்ள வேலம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கூளி ஆட்டம். 

இக்கூளி மண்டில் யார் முதலில் நுழையும் மரபு உரிமையை பெறுவது என்பதில் ஊர் மக்கள் போரிட்டது என்றும் இறுதியில் போரில் தீர்ப்பாக விருபாட்சிபுரம் அக்ரகாரத் தெருவே முதண்மையாக நுழையும் உரிமை மரபு பெற்றதாக வரலாறு கூறுகிறது. இந்த மண்டில் முதலாக நாட்டான் கூளி முதலாகவும் அடுத்து ஊர் கவுண்டர் கூளி அடுத்து பொது மக்களின் கூளி விடப்படும்.


வேலம்பட்டி கூளி ஆட்டம். 
சோழர்கள் ஆட்சிதாக்கமும், போசாளர்  ஆட்சிதாக்கமும், விஜயநகர மன்னர்கள் ஆட்சிதாக்கமும் விருபாட்சிபுரமே தலைமை இடமாக கொண்டிருந்தது. மேலும் இந்த ஊர் வன்னிய ஊர் கவுண்டர் வீடு அரசன் வீடு என்பது போல் "இராயம் வீடு" என்று மரபு ரீதியாக அழைக்கப்படுகிறது.

விருபாட்சி புரம் இன்று மூன்று ஊராக பிரிந்து இருக்கிறது.

குப்பாக்கவுண்டர் தெரு
பள்ளித் தெரு
காமாட்சியம்மன் தெரு. 

சத்திரம் மேல் தெரு, நாட்டான் கொட்டாய், நாட்டான் (எ) அண்ணாமலைக் கவுண்டர் தெரு, ஜெட்டிப்பட்டி மொன்னையன் கொட்டாய், குப்பா கவுண்டர் தெரு, காமாட்சியம்மன் தெரு, பள்ளித் தெரு இவை அனைத்தும் வன்னிய கவுண்டர்கள் ஊர். இவர்கள் அனைவரும் தனித் தனியே பொலி எருதின் கழுத்தில் வடக்கயிறு விட்டு இருப்பக்கமும் வன்னிய அடலேறு இளைஞர்கள் பிடித்துக்கொண்டு எருதின் முகத்தின் முன் பாகத்தில் சிறு கோவில் சிவப்பு துணிக்கட்டி அதை பாய்ச்சல் எருதின் மீது வைக்க, அது மிரண்டோடி பாய பாய பறை மேளம் தட்ட இளைஞர்கள் இங்கு மங்கும் ஓடி யோடி ஓடியோடி எக்கலித்துச் சிரித்து குதித்தும் ஆடியும் ஓ! ஓ! என்றும் சீழ்கை அடித்தும் கொக்கரித்தும் தம் ஆண்மைத் திறத்தோடு அந்தந்த கூட்டம் கூட்டமாக ஆடி வருவார்கள்.

இவ்விழாவை தவிர மாரியம்மன், வேடியப்பன், அய்யனார் போன்ற திருவிழாக்கள் நடைபெறுகிறது.

வலசை போதல்:- 


வலசை போதல் என்பது மழை வேண்டி கிராமத்தை காலி செய்துவிட்டு ஊருக்கு வெளியே ஆற்றங்கரையின் ஓரமாகவோ அல்லது மலையின் மீதோ குடும்பத்துடன் சென்று வருட பகவானை வேண்டி மழை வேண்டி வணங்குவர். பொங்கல் வைப்பது, கிடா வெட்டி பங்காளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டடுவார்கள். இந்த திருவிழாவை கிருஷணகிரி மாவட்ட வன்னிய கவுண்டர்கள் மட்டுமே கொண்டாடுகின்றனர்.

காவேரிபட்டினம் அருகே சந்தாபுரம், குட்டூர், மலையாண்ட அள்ளி, சவூளூர் மற்றும் தளிப்பட்டி கிராமத்தில் உள்ள வன்னியர்கள் ஆடி மாதம் மழை தவறிய காலத்தில் தொடைப்பம், பாய், பொங்கல் வைக்க தேவையான சாமான்கள் மற்றும் ஆடு வெட்டி கொண்டடுவார்கள். காலை 7-க்கு சென்று மாலை தான் வீடு திரும்புவார்கள். 




நெடுங்கல் பயணியர் விடுதி அருகில் பாரூர் ஏரிக்கு தண்ணீர் பிரித்து அனுப்பும் செக் டேமுக்கு அருகில் வலசை போதல் மக்கள்.

கிருஷ்ணகிரி அருகே மழை வேண்டி ஊரை காலி செய்து விட்டு தென்னந்தோப்பில் பொதுமக்கள் குடியேறினர். அங்கு கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்கள்.

கிருஷ்ணகிரி அருகே உள்ளது கள்ளகுறுக்கி கிராமம். இக்கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் விவசாயம் மற்றும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்கள்.

இப்பகுதியில் போதிய மழை இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டுவரும் இக்கிராம மக்கள் மழை வேண்டியும், இந்த ஆண்டு பருவமழை தாமதமின்றி உரிய காலத்தில் பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் வலசை போதல் அல்லது வனபோஜனம் என்று அழைக்கப்படும் நூதன வழிபாடு நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி இக்கிராமத்தில் உள்ள அனைவரும் நேற்று ஊரை காலி செய்துவிட்டு குடும்பத்துடன் அருகில் உள்ள தென்னந்தோப்புகளிலும், மாந்தோப்புகளிலும் குடியேறினார்கள். அவர்கள் தங்களது ஆடு-மாடுகளையும் உடன் அழைத்து சென்றனர். காவலுக்காக 2 இளைஞர்கள் மட்டும் ஊர் எல்லையில் நிறுத்தப்பட்டனர். மற்றவர்கள் அனைவரும் ஊரை விட்டு வெளியேறினர்.



பின்னர் தோப்புகளில் கிடா வெட்டி பொங்கலிட்டு மழை வேண்டி சக்தி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கிடாய் விருந்து சமைக்கப்பட்டு பரிமாறப்பட்டது. மாலை வரை தோப்புகளிலே இருந்தனர். இருட்ட தொடங்கியதும் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். அப்போது ஊர் எல்லை யில் ஒரு ஆட்டை பலியிட்டு வழிபட்டு தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

ஆதாரம்: http://m.tamilkurinji.in/news_details.php?id=24330&categ=1


காவேரிப்பட்டணம் அருகே மழை வேண்டி, ஊரை காலி செய்து காட்டுப்பகுதிக்கு சென்ற கிராம மக்கள் அங்கு ஒப்பாரி வைத்து வினோத வழிபாடு நடத் தினர்.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் மழை வேண்டி, ஊரை காலி செய்து அருகில் உள்ள வனப் பகுதிகளில் தஞ்சமடைந்து வழிபாடு நடத்துவது வழக்க மாகும். இதற்கு ‘வலசை போதல்’ என்று கூறுவார்கள். முன்னோர்கள் கடைபிடித்து வந்த இந்த வழிபாடு முறையை, தற்போதும் பல கிராமங்களில் கடைபிடித்து வருகிறார்கள்.

அந்தவகையில் காவேரிப்பட் டணம் அருகே உள்ள கரடி அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட தேவர்முக்குளம் கிராம மக்கள் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ‘வலசை போதல்’ வழி பாடு நடத்தினர்.


கிராமத்தை காலிசெய்த மக்கள்:-


தேவர்முக்குளம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். இவர்கள் நேற்று அதிகாலை சூரியன் உதயமாவதற்கு முன்பாகவே ஊரை காலி செய்து அனை வரும் வெளியேறினர். குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தங்கள் வீடு களை பூட்டிவிட்டு, ஊருக்கு வெளியே சுமார் ½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரங்க நாதர் கோவிலுக்கு சென்றனர். தாங்கள் வளர்த்து வரும் ஆடு-மாடுகளையும் உடன் அழைத்துச் சென்றனர். இத னால் தேவர்முக்குளம் கிராமம் வெறிச்சோடி காணப்பட்டது. கிராமத்திற் குள் அந்நியர்கள் யாரும் சென்று விடாமல் இருக்க, கிராமத்தின் நுழைவு பாதை யின் குறுக்கே கம்பு கட்டி யிருந்தனர். மேலும் 2 வாலிபர் கள் மட்டும் காவலுக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.



ஒப்பாரி வைத்து வழிபாடு:-


ரங்கநாதர் கோவிலில் கூடிய கிராம மக்கள் அனைவரும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் மழைபெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், தங்கள் கிராமத்தில் வறுமை நீங்கி வளம்பெருக வேண்டியும் அருகில் உள்ள காலி இடத்தில் பெண்கள் ஒப்பாரி வைத்து வழிபாடு நடத்தினர். இதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தோப்புகளில் குடும்பம் குடும்பமாக தஞ்சமடைந்து அனைவரும் ஒன்றாக சமை யல் செய்து சாப்பிட்டனர். தொடர்ந்து மாலையில் சூரி யன் மறைந்ததும் தங்கள் வீடு களுக்கு புறப்பட்டு சென் றனர்.


ஒப்பாரி வைத்து வழிபாடு


ஆதாரம்: http://www.dailythanthi.com/News/Districts/2014/08/17232253/Pray-for-rain-Territory-vacatedKeep-lamenting-Requiem.vpf

http://202.191.144.180/Missing%20Season%20Heavier%20Rain%20In%20drought%20Stuck%20to%20elp%20Krishnagiri%20District

*******************************************************************************************************

இதோடு அல்லாமல் இன்னும் சில பழக்க வழக்கங்கள் தகடூர் நாட்டிற்கு மட்டுமே உள்ளது அதைப்பற்றியும் ஒவ்வொன்றாக பாப்போம். தகடூர் நாட்டின் பழக்க வழக்கங்கள் தமிழகத்திலேயே எங்குமில்லாத பழக்க வழக்கங்கள் ஆகும். இதுவே தொன்மையானதும் கூட.

**************************************************XXXXX*****************************************