தகடூர் நாட்டில் சிறுவழிபாட்டு தெய்வங்கள் அதிகம்,
கற்கால ஆயுதங்கள், நடுகற்கள், இயற்கையான வனம், மண்டு என பல வழிபாட்டு முறைகளை
பின்பற்றியவர்கள். ஆனால் நம் முன்னோர்கள் வழிபட்ட முறைகளை அடுத்த தலைமுறைகளான நாம்
சரியாக கடைப்பிடிப்பதில்லை. நம்ம ஊரின் கலாச்சாரங்களை இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே
இந்த கட்டுரை.
குறிஞ்சியும், முல்லையும் நிறைந்த பகுதி
தருமபுரி மாவட்டம், அவற்றிலும் குறிப்பாக பென்னாகரம் வட்டம் பெரும்பாலும்
குறிஞ்சிப் பகுதியாகவே காட்சியளிக்கிறது. பென்னாகரம் வட்டம், பிளியனுர் அடுத்துள்ள
அக்ராகரம் என்ற ஊரில் இருக்கும் முனியப்பன் தம்பிரானுக்குத் தான் மக்கள்
செல்வாக்கு அதிகம். தருமபுரி மாவட்டத்தில் அக்ராகரம் என்ற பெயரில் பல ஊர்கள்
இருக்கின்றன. இனம் கண்டுபிடிப்பதற்காக பக்கத்தில் உள்ள சிற்றூரின் பெயரை சேர்த்து,
அந்த ஊரைப் பெயர்ச் சொல்லி அழைப்பார்கள். தருமபுரி – பென்னாகரம் நெடுஞ்சாலையில்
மாய, மந்திர, தந்திரங்களில் புகழ் பெற்ற ஓர் ஊர் இருக்கிறது. அந்த ஊருக்கு
“இண்டூர்” என்று பெயர். இதை அடுத்து மிகப்பெரிய ஊரான பில்லியனுர் வருகிறது.
பில்லியனுர் அடுத்துள்ள ஊர் தான் வன்னியர்களின்
குலதெய்வமான “முனியப்பன்” என்ற குடிசாமி கொண்டிருக்கும் அக்ராகரம் என்ற ஊராகும்.
இந்த ஊரை தான் பில்லியனுர் அக்ராகரம் அல்லது பி.அக்ராகரம் என்றே அழைக்கப்படுகிறது.
இங்கிருந்து இரண்டு கி.மீ தொலைவில் நெடுஞ்சாலையிலேயே “நல்லம்பட்டி” என்ற ஊர்
உள்ளது. இந்த ஊர் சித்த மருத்துவத்தின் தாயகம் என்று சொன்னால் அது மிகைப்பட
கூறுவதன்று.
நல்லாம்பட்டி கிராமம்.
ஆந்திர மாநிலத்தில் “எலும்பு முறிவுக்கு” என்று
புகழ்பெற்ற ஒரு மருத்துவமனை இருக்கிறது. அந்த மருத்துவமனை சித்தூர் மாவட்டத்தில்
“நகரிப்புத்தூர்” என்ற ஊர் இருக்கிறது. தருமபுரி மாவட்டத்தில், பென்னாகரம், காவேரி
செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள நல்லாம்பட்டிக்கு மக்கள் திரள், திரளாக வருவார்கள்.
இங்கு சிறப்பு வாய்ந்த இரண்டு மருவத்துவமனைகள் உள்ளது மா.பெருமாள் கவுண்டர்
மற்றும் அமரர் டாக்டர்.M. முருகேசன் கவுண்டர் எலும்பு மருத்துவமனை உள்ளது. இதே
போல் இண்டூர் அருகே குப்புசெட்டிப்பட்டி கிராமத்தில் திரு.கந்தசாமி கவுண்டர் எலும்பு முறிவு மருத்துவமனை
உள்ளது. இப்படி தருமபுரி மாவட்டம் அல்லாமல் தமிழகத்தில் உள்ள ஈரோடு, சேலம்,
பெங்களூர் போன்ற பகுதிகளில் இருந்தும் சிகிச்சைக்காக நல்லம்பட்டி கிராமத்திற்கு
வருகின்றனர். நல்லாம்பட்டியில் செய்யப்படும் எலும்பு முறிவு மருத்துவம், ஆந்திர
மாநிலம் நகரிப்புத்தூரை தோற்கடிக்கும் வகையில் சிறப்பாகச் செயல்படுகிறது. பணம்
பெறாமல் முற்றிலும் இலவசமாகவே எலும்பு முறிவுகளுக்காகச் செயல்படும் ஒரு
மருத்துவமனை இருக்கிறது என்றால் அது நல்லாம்பட்டி என்று கூறக்கூடிய ஊரில்
இருக்கும், பரம்பரை, பரம்பரையாக செய்து வரும் சித்த மருத்துவமனையாகும்.
நல்லாம்பட்டி எலும்பு முறிவு மருத்துவமனைகள்
குப்புசெட்டிப்பட்டியில் உள்ள கந்தசாமி கவுண்டர் வைத்திய சாலை
குறிஞ்சி(பென்னாகரம் வட்டம்) நிலப்பகுதியில்
வாழ்ந்த மக்கள் போர் வீரர்களாகவும், வேட்டையாடுவதில் வல்லவர்களாக உள்ள
வில்லாளர்களாகவும் இருந்தார்கள். இவர்கள் அனைவரும் சத்திரிய இன மக்களாக
இருந்தார்கள். வில்லாளர்களும், இவர்களுடைய இனத்தைச் சேர்ந்த நிலவுடமைக்காரர்களும்
வணங்கிய தெய்வங்களுள், முனியப்பன் தம்பிரானும் ஒன்றாகும். முனிதம்பிரானுக்குச்
சிலைகள் இல்லை, உருவ வழிபாடுகள் இல்லை, கோவில் இல்லை என்றாலும் வன்னியர்களின்
முன்னோர்கள் ஒரு கற்பனையான, பெரிய உருவத்தை உருவாக்கி, பெரிய மீசையும்,
கோரைப்பற்களையும், முட்டைக்கண்களையும், தப்பமான பெரிய பெரிய கை, கால்களுடன்
மற்றவர்கள் பார்த்தவுடன் மிரண்டு போய் தங்கள் சக்திக்கு அப்பால் ஏதோ ஒரு பெரிய
உருவம் நம்மை ஆட்டிபடைப்பதாக நம்புகிறார்கள்.
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்
முனியப்பன் சிலைகள் இருக்கின்றன. அவையெல்லாம் பி.அக்ராகரம் முனியப்பனை பார்த்துவிட்டு
வந்தபின், இடைக்காலங்களில் அவ்வவ்வூர்களில் வைக்கப்பட்ட சிலைகளாகும்.இன்றும் கூட
ஊர்களில் உருவ வழிபாடு கிடையாது. வன்னியர்கள், கூட்டங்கூட்டமாகச் சென்று தொலை
தூரத்தில் உள்ள ஓரிடத்தில் கொண்டாடுகிறார்கள். அவர்கள் வழிபாட்டிடம் வனமாக
இருக்கும். அல்லது ஆலமரத்தடியிலோ, வேப்பமரத்தடியிலோ அல்லது பரந்த வெளியிலோ எவ்வித
உருவமின்றி, பொங்கலிட்டு பூசை செய்வார்கள்.
அவர்கள், பூசைசெய்யுமிடத்தில், பறையொலிகள்,
மேளதாளங்கள், வாணவேடிக்கைகள் எதுவுமே இல்லை. ஆனால் அவர்கள் ஒரு கட்டுப்பாட்டுடன்
தான் “முனி தம்பிரான்” கொண்டாடுகிறார்கள். அவர்களுடைய பூசாரியை பார்த்தால்,
பிராமணர்களே வெட்கி தலை குனிவார்கள் காரணம் வன்னிய பூசாரிகள் எந்த கோவிலில் பூசை
செய்தாலும் தாங்கள் வாய்களை ஒரு துவாலையால் கட்டிக்கொண்டு தான் பூசை செய்வார்கள்.
அக்ராகரம் முனியப்பன் சுவாமி
கோவில் வரலாறு:-
300, 400 ஆண்டுகளுக்கு முன்பு மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஒரு
செவ்வாய் கிழமை அன்று “கொம்பரசன் மலையில்” முனியப்பன் திருவிழாவை கொண்டாடி
உள்ளார்கள். ஓரிரு ஆண்டில் ஒரு முதியவருக்கு மருள் வந்து அருள் வாக்கு சொல்ல
தொடங்கினார்.
“நான் காவல் மலையில் குடியிருக்கும் முனிசாமி
என்னுடைய வேலையும், பூசைமணியும் எடுத்துக்கொண்டு வந்து வருகின்ற எட்டாம் நாள் (அதாவது
மார்கழி மாதம் பிறந்தவுடன்) வளர்பிறை அன்று வரும் செவ்வாய் கிழமை ஊர் மக்கள் கூடி
விழா எடுத்தால் உங்களை நோய், நொடிகள், பேய், பிசாசுகள் அண்டாமல் காப்பாற்றுவேன்”
என்று கூறி மருள் போய்விட்டது.
அக்ரகாரத்தில் உள்ள மக்கள் அனைவரும்
கவுண்டர்கள்(வன்னிய குல க்ஷத்ரியர்) ஆவார்கள். முனியப்பன் சாமி சொன்ன படியே ஊர்கவுண்டர்கள் தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் போட்டார்கள். அக்கூட்டத்தில் எடுத்த
முடிவின் படி அவர்களுக்குள் ஒரு தர்மகர்த்தாவையும் தேர்வு செய்தார்கள். அவர்கள்
தலைமையின் கீழ் 5 ஆண்டுக்கு ஒருமுறை விழா எடுப்பது எனவும், இந்த ஆண்டே அதுவும்
வரும் செவ்வாய் கிழமை மார்கழி மாதம் முதல் விழாவை தொடங்குவது எனவும் முடிவு
எடுக்கப்பட்டது.
மார்கழி பிறந்து 9 நாள்களுக்குள்ளாகவோ அல்லது 15
நாள்களுக்குள்ளாகவோ வருகின்ற ஒரு செவ்வாய்கிழமை அன்று விழா எடுப்பதெனவும் விழா
கொண்டாடும் வரை “ஒரு பொழுது”(நோன்பு) இருப்பது எனவும், சாமியடியவன் அருள் வாக்கு
சொன்னபடி முடிவெடுக்கப்பட்டது. கோம்பரசன் கல்மலை உள்ள காட்டிற்கு சென்று சுமார் 12
மணிக்கு பெரிய குண்டின்மீது வைக்கப்பட்டுள்ள வேலும், சிறிய மற்றும் பெரிய
முனியப்பனுக்கு வன்னிய வில்லாளர்களால் பூசைகள் செய்யப்பட்டது. வேலையும், மணியையும்
எடுத்து மூங்கில் பேழையில் வைத்து அவற்றை ஒரு வில்லாளி குதிரை மீது வைத்துக்கொண்டு
ஆக்ராகரத்தை நோக்கி சென்றான், மற்ற வில்லாளிகள் பின் தொடர்ந்தனர்.
முறையோடு விடியற்காலையில் பொழுது புலர புலர
பொங்கல் வைத்து, தளிகை சோறு படைத்து பூசை செய்யப்பட்டது.அங்கு வந்திருந்த
மக்களுக்கு பொங்கலும், தளிகைச் சோறும் பிரசாதமாக கொடுக்கப்பட்டது. ஆனால் கிடா
வெட்டுதல் நிகழ்ச்சி எதும் இல்லை.காலபோக்கில் அங்கிருந்த கிராம மக்களின் ஒற்றுமையின்மையினால்
சண்டைகள் வந்தன, பிறகு முனியப்பன் விழா அக்ராகரம் என்ற ஒரே ஊரின்
கட்டுப்பட்டுக்குள் வந்தது. காலம் செல்ல செல்ல 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடிய
திருவிழா வருடத்திற்கு ஒரு முறை கொண்டாட துவங்கிவிட்டார்கள், திருஉருவச்சிலையும்
100 ஆண்டுகளுக்கு முன்னர் தான் செய்யப்பட்டது.
அக்ராகரம் முனியப்பன் திருவிழா
ஒரு பக்கம் பொங்கலோ பொங்கல் என்றும் மறுபக்கம்
பறையொலிகள் மற்றும் மேளதாளங்கள் முழங்கி கொண்டிருந்தன. பூசாரி முனியப்பனுக்கு பூசை
செய்யும்பொழுது சிலர் மருள் வந்து ஆடிக்கொண்டும் இருப்பர் அவர்களுக்கு பூசாரி
எலுமிச்சை பழம் கொடுத்து மருள் வந்தவர்களை சாந்தி படுத்துவர்.
முப்பூசை:-
முனியப்பனுக்கு முப்பூசை செய்யப்பட்டது. எந்தவித
சத்தம் இல்லாமல் கிடா வெட்டினர் அதிலிருந்து வரும் ரத்தத்தை புதுப்பானையில்
பிடித்துகொண்டனர் முறையே கோழி மற்றும் பன்றி பலியிட்டனர் அவற்றின் இரத்தமும் கிடா
ரத்தத்தோடு சேர்த்து பிடித்துகொண்டனர். பிறகு கறியை சமைத்து முனியப்பன் காலடிக்கு
முன்புறம் தரையில் இரண்டு தலை வாழை இலைகள் விரித்துப்போட்டு அதில் பொங்கல்,
ஆட்டுக்கறி, கோழி மற்றும் பன்றிக்கறியை ஊற்றினர், தேங்காய், பழம், போன்ற பூசை
பொருள்களும் வைக்கப்பட்டன. ஒரு ஐந்தடி தள்ளி கனிமார் தளிகைகள் மூன்று
வைக்கப்பட்டன. இத்துடன் ஒன்றே கால் ரூபாயும் காணிக்கையாக வைக்கப்பட்டது.
புதுப்பானையில் வைத்திருந்த ரத்தத்தில், கைநிறைய
மூன்று முறை படையலில் இருந்த சோற்றை ரத்தத்துடன் போட்டு அதை நன்கு கலக்கி விட்டார்
தர்மகர்த்தா. இதற்கு “பலிசோறு“ என்று பெயர். சுமார் 9 மணி அளவில் முதல் பூசையாக
தருமகர்த்தா முன்னிலையில் கவுண்டர் மக்களுக்காக ஒரு பூசை செய்யப்பட்டது. அதை
அடுத்து கனிமார் பூசை செய்யப்பட்டது. கவுண்டர்கள மட்டுமல்லாமல் மற்ற சமுதாய
மக்களும் சாமி கும்பிட வருவர். இந்த பூசைகள் எல்லாம் முடிந்தவுடன் பலிசோறை
முனியப்பனுக்கு தென்கிழக்கு மூலையில் “பொலியோ பொலி” என்று சொல்லிக்கொண்டு சோற்றை
எடுத்து வீசி எறிந்தனர். கிழக்கு பக்கம் தவிர மற்ற அனைத்து திசைகளிலும் பொலியோ பொலி
என்று சோற்றை வாரி வீசினர். இந்த பானையையும் அங்கேயே உடைத்து விட்டு கைகளை
அலம்பிவிட்டு மீண்டும் தேங்காய் உடைத்து பூசை செய்த வண்ணம் இருந்தார் பூசாரி.
அக்ராகரம் அருகே உள்ள புதூர் கிராமத்தில்
இருந்து ஒரு பக்கம் அழகு குத்திக்கொண்டு வந்தனர் அதே போல் சுற்றி உள்ள நான்கு
கிராமங்களில் இருந்தும் ஆண்கள் பெண்கள் என அழகு குத்திக்கொண்டு முனியப்பனுக்கு
நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். சில ஆண்கள் உடல் முழுவதும் எலுமிச்சை பழத்தை உடல்
முழுவதும் ஊசியால் குத்திக்கொண்டு இருந்தனர். நேர்த்திக்கடன் செலுத்தியவர்கள்
அனைவரும் மஞ்சள் ஆடையை அணிந்திருந்தனர்.
இதில் மிகவும் வருந்ததக்கது என்னவென்றால்
இவ்வூரில் உள்ள சில அரசியல் கட்சிக்காரர்கள் ஊருக்குள் சண்டையை மூட்டி, அதை காரணம்
காட்டி முனியப்பன் விழாவை அரசே எடுத்து நடத்துமாறு செய்துவிட்டனர். தற்போது இந்த
கோவிலை “இந்து அறநிலையத் துறை” ஆக்கிரமித்துவிட்டது. இந்த கோவிலில் அதிகமான
வருமானம் வந்தது இதை வைத்து புதிய பள்ளிக்கூடமோ அல்லது தாய்,சேய் நலவிடுதி
கட்டுவதற்காக ஒரு இடம் என முடிவு செய்து உள்ள நேரத்தில் அரசு ஆக்கிரமித்து மக்கள்
எமாற்றப்பட்டுவிட்டார்கள். இது போல பல கோவில்கள் உள்ளூர் மக்களின் குலதெய்வங்களை
அரசு ஆக்கிரமித்துவிட்டது.
"இந்து அறநிலை துறை" கட்டுப்பாட்டில் முனியப்பன் சுவாமி
மார்கழி மாத செவ்வாய் கிழமை மட்டுமல்லாமல்
ஆண்டுதோறும் செவ்வாய் கிழமைகளில் வெளியூர் மக்கள் பொங்கல் வைத்து கும்பிட்டு
செல்கிறார்கள். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள மிகச்சிறப்பு வாய்ந்த
முனியப்பன் கோவில் இதுவே ஆகும்.
தருமபுரி ASTC நகரில் உள்ள முனியப்பன் சுவாமி
இந்த கட்டுரை அறிந்துக்கொள்ள காரணமான முக்கிய
நபர்கள்:-
1. “சேவைச் செம்மல்” திரு. சி. மாணிக்கம்.
2. திரு.காளியப்பன் கவுண்டர் த/பெ.திரு.
முனியப்பன், (சாமி அடுப்பு மற்றும் கனிமார் அடுப்பு இவர் கையாலயே தோண்டுவார்,
முப்பூசையும் இவர் தலைமயில் நடக்கும்)
3. திரு. நஞ்சப்பன் கவுண்டர் த/பெ. திரு.ஜூகல
கவுண்டர். புதூர். (அலகு குத்தும் முறையை முதன் முதலாக புகுத்தியவர்)
4. திரு. மாது, கிருஷ்ணகிரி.
****************************************************************************************************************