October 2, 2015

தருமபுரி தோற்றம் - தகடூர் நாட்டுத் "தகடூர்"

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே தருமபுரி மாவட்டம் சிறப்பிடம் பெற்றிருந்தது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு மக்கள் வாழ்ந்ததற்கான பாறை ஓவியங்கள், கல் திட்டைகள், கல்வட்டங்கள், மலைக்கோட்டைகள், பெருங்கற்கால ஓவியங்கள் மற்றும் பெருங்கற்கால கருவிகள் கிடைத்துள்ளன.

அதியமான் ஆட்சி பரவி இருந்த பகுதியை “தகடூர் நாடு” என அழைத்தனர், இப்போது தருமபுரி மாவட்டம் என அழைக்கிறோம். தற்போதைய தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெருங்கற்காலத்திலிருந்தே அதாவது சுமார் 10000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே மக்கள் வாழ்ந்த பகுதியாக திகழ்ந்திருக்கிறது. பல இடங்களில் பழைய கற்கருவிகளும், புதிய கற்கால கருவிகளும் கிடைத்துள்ளன. புதிய கற்காலத்தில் தான் அதாவது 7000 ஆண்டுகளுக்கு முன்னர் தான் மனிதன் சிறு சிறு ஊர்களை அமைத்து கொண்டு நிலத்தை பயிர் செய்து வாழத் தொடங்கினான். 

கிருஷ்ணகிரி மாவட்டம், பருகூருக்கு அருகே மல்லப்பாடி என்ற ஊரில் அவன் வரைந்த பெருங்கற்கால ஓவியங்கள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் குதிரை வீரர்களின் ஓவியங்களும், காளை மாடும் அழகாக தீட்டப்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் கிடைத்துள்ள ஓவியங்களில் இதுவே பழமையான ஓவியமாகும்.


"மல்லப்பாடி பாறை ஓவியம்" Photo from Ancient Tamil Civilization

இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே மல்லச்சந்திரம் என்னுமிடத்தில் சுமார் 3000 ஆண்டுகள் பழமையான் பெருங்கற்கால ஈமக்காடு உள்ளது. ஒரே இடத்தில் சுமார் 200 கற்திட்டைகள் இருப்பது இங்கு மட்டுமே. இதை இங்குள்ள மக்கள் "பாண்டவர் கோவில்" என அழைக்கின்றனர். 
இதைப்பற்றி மேலும் அறிய: 



"பாண்டவர் கோவில்" (எ) கற்திட்டைகள் - புகைப்படம் திரு. அறம் கிருஷ்ணன்.


தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே சுமார் 2500 – 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்த புதிநிலை திரு. சதானந்தம் மற்றும் சுகவனம் முருகன் அவர்களால் கண்டுபிடுக்கப்பட்டது. இந்த புதிர் நிலை பொங்கல் அன்று இங்குள்ள கிராம மக்கள் “ஏழுசுத்து கோட்டை சாமி” கோவில் என வணங்குகின்றனர்.   

இதைப்பற்றி மேலும் அறிய:  

வெதரம்பட்டி "புதிர் நிலை" 


தகடூர் நாட்டின் மறவர்கள் தொல்குடிகளான மழவர்கள்/மழவராயர்கள் இன்றும் இப்பகுதியில் பெரும்பான்மையாக வாழ்வதை அறிவோம். மழவராயர் என்பார் மழவர்களுக்கு தலைவர் என்று பொருள். மழவர்கள் என்பார் சிறந்த வீரர்களுக்குள் ஒரு பகுதியினர். மழவர்கள் தகடூர் நாட்டின் பழகுடியினர் என்றும் அவர்கள் தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் வாழும் பெரும்பான்மையானவர்கள் என்று தமிழ் தாத்தா ஊ.வே. சாமிநாதய்யர் கூறுகிறார். 

மழவர்கள் பற்றி மேலும் அறிய: http://thagadoor-naadu.blogspot.com/2015/04/blog-post_24.html 

தருமபுரியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது மொதூர் கிராமம், இது வரலாற்று சிறப்பு மிக்க ஊர். இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பெருங்கற்கால ஓடுகள் மற்றும் சுமார் 10000 ஆண்டுகளுக்கு முந்தைய பல சின்னங்கள் கிடைத்துள்ளது. 

மொதூர் பற்றி மேலும் அறிய: 
2. http://www.academia.edu/9031131/Megalithic_and_Early_Iron_Age_Culture_of_Peninsular_India 


மோதூர்

Photo from Ancient Tamil Civilization

தகடூர் நாட்டுத் தகடூர்:- 

சங்ககாலம் தொடங்கி 17 ஆம் நூற்றாண்டு வரை தருமபுரியை தகடூர் என்றே குறிப்பிடுகின்றன. தகடூர் நாட்டின் பெயராகவும், ஊரின் பெயராகவும் இருந்தது என்பதற்கு கல்வெட்டுகளில் “தகடூர் நாட்டுத் தகடூர்” என்ற வரியே நமக்கு ஆதாரம். தகடூர் நாட்டின் தலைநகரம் தருமபுரி(தகடூர்) ஆகும். நீண்ட நாள் உயிர் வாழ உதவும் கிடைத்தற்கரிய நெல்லிக்கனியை தான் உண்ணாமல் அவ்வையாருக்கு வழங்கிய அதியமான் ஆட்சி புரிந்த தகடூரே தற்போது தருமபுரி என வழங்கப்படுகிறது.

தகடூர் அதாவது தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஆந்திர மற்றும் கர்நாடகா எல்லைப்புற பகுதியில் இருப்பதால் தமிழகத்தில் பன்மொழி பேசும் மாவட்டங்களாக உள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மற்றும் வடமொழி என பல மொழி கல்வெட்டுகளை தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காணலாம்.

பல்லவர்கள், கங்கர்கள், பாணர்கள், நுளம்பர்கள், சோழர்கள், போசாளர், விஜயநகர பேரரசுகள், மராட்டியர், அத்திமல்லர், மைசூர் அரசர்கள் இப்படி பலர் தருமபுரியை கைப்பற்றி ஆட்சி புரிந்தாலும் உள்ளூர் நாட்டு நாயகர்களே அதிகாரம் செலுத்தியவர்கள். இதில் செல்வாக்குடன் இருந்தவர்கள் பல்லவர்களுக்கு அடங்கிய சிற்றரசுகளே என்பது குறிப்பிடத்தக்கது.

சங்க கால மன்னர் அதியர்களின் ஆட்சியின் போது தருமபுரி தகடூர் என்று அழைத்தனர். களப்பிரரை வீழ்த்தி தொண்டை நாட்டில் ஆட்சி அமைத்த பல்லவர் தகடூர் நாட்டிலும் தமது ஆதிக்கத்தை ஏற்படுத்தினர். கி.பி. 5 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு வரை தகடூர் நாடு ஐந்து நாடுகளாக இருந்துள்ளது. அவை,

  • புறமலை நாடு (அரூர் பெரும்பகுதிகள் உள்ளடக்கியது)
  • கோவூர் நாடு (பாலக்கோடு, காரிமங்கலம், கிருஷ்ணகிரி)
  • தகடூர் நாடு (தருமபுரி)
  • மீகொன்றை நாடு (அரூர்)
  • மீவேணாடு (ஊத்தங்கரை)
தகடூர் நாடு 


கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் தகடூர் நாடு “கங்க நாடு” என்றும் அழைக்கப்பட்டது. (தகடூர் நாட்டு பிரிவுகளை பற்றி அடுத்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்) நாடு என்ற ஒருவட்ட அளவு எனலாம். அதனை நாட்டு காமிண்டர்கள் ஆண்டுள்ளார்கள்.

மேலும் படிக்க: http://thagadoor-naadu.blogspot.com/2015/05/blog-post.html

கி.பி. 873 ல் மகேந்திர நுளம்பன் என்பவர் தகடூரை கைப்பற்றி நுளம்பர் ஆட்சியை ஏற்படுத்தினான். இவர்கள் கி.பி. 968 வரை ஆட்சி புரிந்தனர். அப்போது தகடூரை “நுளம்பபாடி 32000” என அழைக்கப்பட்டது. இப்போது தான் அதியமான் கோட்டை “மகேந்திர மங்கலம்” எனவும் பெயர்மாற்றப்பட்டது. நுளம்பர்கள் பாண அரசர்களிடம் தோற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சோழப் பேரரசின் எல்லைகளை விரிவுப்படுத்தி கொண்டிருந்த முதலாம் இராசராசன் தகடூர் (எ) நுளம்பபாடியை வென்று தனி மண்டலமாக பெயரிடுகின்றான். கி.பி. 985 – 1014 வரை தகடூர்(எ) நுளம்பபாடி மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு “நிகரிலிச் சோழ மண்டலம்” என்றழைக்கப்படுகிறது. கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் இது “விஜய ராஜேந்திர மண்டலம்” என்ற பெயரை பெறுகிறது. அப்போது ஓசூர் பகுதியை “முடி கொண்ட சோழ மண்டலம்” என அழைத்தனர்.

மூன்றாம் குலோத்துங்கனுக்கு கீழ் இயங்கிய அதியன் மரபினரான விடுகாதழகிய பெருமாள், அத்தி மல்லன், கரிகால சோழ ஆடையூர் நாடாழ்வான் ஆகியோர் குலோத்துங்கனுக்கு கீழ் ஆட்சி புரிந்தனர் எனலாம். சோழர்கள் வீழ்ச்சியுற்ற பின் அதாவது கி.பி. 1279 ல் அதியன் மரபினர்களும் அரசியலில் மறைய தொடங்கினர். இதுவே போசாளர் ஆதிக்கம் துவங்க ஆரம்பித்தது. 

சோழரில் ஏற்பட்ட குழப்பத்தில் கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் உதவ வந்த போசாளர்கள் தகடூரிலும் ஆட்சியமைத்தனர்கள். போசாள மன்னன் வீரராமநாதன் கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாணியை தனது இரண்டாவது தலைநகராக தேர்ந்தெடுத்தான். முதல் தலைநகர் திருச்சி அருகே சமயபுரம் என்ற கண்ணனூர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய ஆட்சி காலத்தில் தகடூரானது “கடைக்கொட்டூரான நானா தேசிப்பட்டினம்” என்றழைக்கப்பட்டது. 

போசாளர் வீழ்ச்சிக்கு பின் தகடூர் விஜயநகர பேரரசின் கீழ் வந்தது. ஸ்ரீ புக்கணன், கம்பணன், தேவராயர், மல்லிகர்ஜுனர் போன்ற விஜயநகர மன்னர்கள் ஆட்சி புரிந்தனர்கள். விஜயநகர சிற்றரசர் “ஜெகதேவராயன்” கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவியில் இருந்து ஆட்சி புரிந்தான். இவருக்கு பின்னர் தகடூர் பல்வேறு பாளையக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. இவரின் வீழ்ச்சிக்கு பின் தகடூர் மைசூர் மன்னர் “சிக்க தேவராயர்” என்பவரால் கி.பி. 1688 முதல் 1768 வரை மைசூர் உடையார் வசம் இருந்தது. 

கி.பி. 1761 முதல் 1782 வரை தகடூர் ஐதர் அலி மேலாதிக்கத்தின் கீழ் வந்தது. பின் இவரது மகன் திப்பு சுல்தான் கி.பி. 1782 முதல் 1799 வரை ஆட்சி புரிந்தான். கி.பி. 1792 முதல் தமிழகத்தின் பாரமகால் எனும் தருமபுரி சேலம் மாவட்டங்கள் ஆங்கிலேய கிழக்கிந்திய கும்பினி ஆட்சியின் கீழ் வந்தது. அப்போது தான் தருமபுரியின் அதிகாரியாக “தாமஸ் மன்றோ” நியமிக்கப்பட்டார். 

சர் தாமஸ் மன்றோ நினைவுத் தூண்:


நம்ம மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் சின்னங்களில் சர் தாமஸ் மன்றோ நினைவுத் தூண் ஒன்றாகும். இவர் ஆங்கிலேயராக இருந்தாலும் இந்தியரின் நல்வாழ்விற்காக பாடுபட்டவர், இவருக்கு நன்றியை தெரிவிக்கும் பொருட்டு தருமபுரி மாவட்ட மக்கள் நினைவுத் தூண் ஒன்றை அமைத்தனர். இந்த தூண் சுமார் 20 அடி உயரம் உள்ளது.

மன்றோ அவர்கள் 1792 முதல் சுமார் 7 ஆண்டுகள் தருமபுரியில் தங்கி பணிபுரிந்துள்ளார். நம்முடைய மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஏற்கனவே இங்கிருந்த சோழர் கால குளத்தை சீர் செய்துள்ளார். தோட்டம் ஒன்றையும் எற்ப்படுத்தியுள்ளார். அதனால் அக்குளம், தோட்டம் இரண்டும் மன்றோ சாப்பு குளம், மன்றோ சாப்பு தோட்டம் என அழைக்கப்பட்டது. 

விவசாயிகள் அரசுக்கு நேரடியாக நிலவரி செலுத்தும் ராயத்துவரி முறை ஏற்பட வழி அமைத்தவர். 1799 இல் பணி நிமித்தமாக சென்னப்ப நாயகர் பட்டினத்திற்கு குடியேறினார். 

நம்ம ஊரைப்பற்றை அவர் கூறியது, "இது மிகவும் ரம்மியமானதோர் பிரதேசம். இவ்விடத்தில் உள்ள ஒவ்வொரு மலையும் மரமும் எனக்கு இன்பத்தை தருகிறது. நான் தருமபுரியில் இருக்கும் போதெல்லாம் இந்த தோட்டத்தில் ஒரு மணிநேரமாவது கழித்து வருவேன். இவ்விடத்தை விட்டு இப்போது நான் செல்ல வேண்டியிருப்பதை நினைக்க வெகு நாட்கள் பழகிய நண்பனை விட்டு பிரிய நேர்ந்தால் எவ்வித கவலை உண்டாகுமோ அத்தகு கவலை உண்டாகிறது."

சென்னை மகாணத்தின் கவர்னராக பொறுப்பேற்ற மன்றோ 6.07.1799 ல் காலமானார். 



தமஸ் மன்றோ தூண். 

இவ்ளோ வரலாற்றை கொண்ட தூணை பாதுகாப்பது தருமபுரி மக்களின் கடமை. 

தருமபுரி தோற்றம்:- 


1804 -ல் சேலம், ஒருமாவட்ட தலைமைச் சிறப்பை பெற்றிருந்தது, பல காரணங்களால் சேலமே மாவட்டத் தலைநகராக சிறப்புற்றது. தருமபுரி கிருஷ்ணகிரி, நாமக்கல் எல்லாமே சேலம் மாவட்டத்திற்குள் இருந்தன.
சுதந்திரம் அடைந்த பின்னரும் இந்தியாவிலேயே பெரிய மாவட்டமாக இருந்த சேலம் மாவட்டத்தை தென் சேலம், வட சேலம் என இரு மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் என அரசை வற்புறுத்தி இருக்கின்றனர்.

வட சேலம் மாவட்டம் அமையும் போது தலைநகரம் எது..? தருமபுரியா..? கிருஷ்ணகிரியா..? ஒசுரா..?

1962 ல் நடைபெற்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் சுயேட்சியாக நின்று வெற்றிபெற்றவர் காரிமங்கலம் R. S. வீரப்ப செட்டியார். வட சேலம் மாவட்டத்திற்கு அதாவது புதிய மாவட்டத்திற்கு தருமபுரியே தலைநகராக இருக்க வேண்டும் என்பதற்காக பாடுபட்டவர். ஆனால் தனது பதவி காலத்திலேயே இறந்து விட்டதால் 1965-ல் தருமபுரி தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது.

இடைத்தேர்தலில் D.N. வடிவேலு கவுண்டர் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். R.S. வீரப்ப செட்டியார் எடுத்த முயற்சி வீணாகி விடக்கூடாதல்லவா, ஆதலால் புதியதாக உருவாகும் மாவட்டத்திற்கு தருமபுரி மாவட்டம் என்றும் இம்மாவட்டத்தின் தலைநகரம் தருமபுரி தான் இருக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

அப்போது முதலவராக இருந்த திரு. பக்தவச்சலம் அவர்கள் சேலம் மாவட்டத்தை வட மற்றும் தென் சேலம் என்றே பிரிக்கவேண்டும் என்று இருந்துள்ளார். ஆனால் D.N. வடிவேலு கவுண்டர் அவர்களின் விடா முயற்சியால் புதியதாக உருவான மாவட்டத்திற்கு "தருமபுரி மாவட்டம்" என்றும் தருமபுரி மாவட்டத்தின் தலைநகர் "தருமபுரி" என்றும் காந்தியடிகள் பிறந்த தினமான 02.10.1965 அன்று அறிவிக்கப்பட்டது.

D.N. வடிவேலு கவுண்டரும், R.S. வீரப்ப செட்டியாரும் இல்லை என்றால் தருமபுரி என்ற ஒருமாவட்டம் இருந்திருக்காது. வட சேலம் மாவட்டமாக இருந்திருக்கும். தருமபுரி என்ற மாவட்டம் உருவானதற்கு முழு காரணமே R.S. வீரப்ப செட்டியாரும், D.N. வடிவேலு கவுண்டருமே காரணம்.

இவ்வாறு தொன்மை வரலாற்று பெருமைகளால் உயர்ந்து நிற்கும் தருமபுரி மாவட்டமாக 02.10.1965 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் இருந்து தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. 



தெய்வத்திரு. D. N. வடிவேலு கவுண்டர். 

தருமபுரி மாவட்டமாக உருவாகி 50 ஆண்டுகள் ஆகியதை வடிவேலு கவுண்டர் நினைவுகளுடன் பொன் விழா கொண்டாடப்பட்டது.



தருமபுரி (எ) தகடூர் பெயர் காரணம் :-


தகடு என்பது குறிப்பாக தாமரை மலரின் புறஇதழையும், பொதுவாக பூவின் புறஇதழையும் குறிக்கும். தாமரை வடிவில் அமைக்கப்பட்ட ஊராதலின் இப்பெயர் பெற்றது எனவும் பிற்கால கல்வெட்டு ஒன்றில் "தடங்கமலத் தகடை" என்று குறிக்கப்படுவது இப்பொருளில்தான் எனவும் கூறுவர்.
தகடு என்பதற்கு மென்மையும் தட்டையும் ஆன வடிவு என்பது மற்றொரு பொருள் நிலவியல் அமைப்பில் சுற்றிலும், பெரும்பாலும் மலைகளாயிருக்க நடுவில் அமைந்த சமவெளியில் "தகடூர்" அமைந்திருக்கக் காணலாம்.
பின்னரே "தகடூர்" என்பது "தருமபுரி" ஆனது.

ஆனால் இன்று பல ஊடகங்களும், நண்பர்களும் "தர்மபுரி" என்று எழுதுகின்றனர், ஆங்கிலத்தில் வேண்டுமானால் இது சரியாக இருக்கலாம் அனால் தமிழில் இது பொருள் தருவதில்லை. இந்த பெயர்கேன்று ஒரு வரலாறு இருக்கும் போது தவறாக எழுதுவதை தவிர்க்க வேண்டும்.

தர்மபுரி என்பது தவறு "தருமபுரி" என்பதே சரியானது..



இன்றைய தருமபுரி:- 


வடக்கில் கிருஷ்ணகிரி மாவட்டமும், கிழக்கில் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களும், தெற்கில் சேலம் மாவட்டமும், மேற்கில் கர்நாடக மாநிலத்தின் சாமராசநகர் மாவட்டமும் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 15,06,843 மக்கள் வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். தர்மபுரி மாவட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 68%, பெண்களின் கல்வியறிவு 53% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99%[3] விட குறைவானது. இம்மாவட்ட மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

14வது சட்டமன்ற உறுப்பினர்கள்:- 

பாலக்கோடு கே. பி. அன்பழகன் - அதிமுக
பென்னாகரம் ந. நஞ்சப்பன் - சிபிஐ
தர்மபுரி ஏ. பாஸ்கர் - தேமுதிக
பாப்பிரெட்டிப்பட்டி பி. பழனியப்பன் - அதிமுக
அரூர் டில்லிபாபு - சிபிஎம்

பிரிக்கப்படாத தருமபுரி மாவட்டமாக இருந்த போது. பின் வரலாற்றில் என்றுமே பிரிக்கப்படாமல் இருந்த தருமபுரி - கிருஷ்ணகிரி மாவட்டத்தை 09.02.2004 அன்று தருமபுரி மாவட்டத்தில் இருந்து தனி மாவட்டமாக கிருஷ்ணகிரி பிரிக்கப்பட்டது. 

தகடூரின் சிறப்பு:- 


தமிழ்நாட்டில் எவ்வூருக்கும் இல்லாத பெருமை தகடூர் நாட்டிற்கு(தருமபுரி - கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு) உண்டு. காவிரி அன்னை கன்னட நாட்டில் பிறந்து தமிழகத்தில் உள்ள தருமபுரி மாவட்டத்தின் பென்னாகரத்தின் வழியாக சேலம், திருச்சி தஞ்சை மாவட்டங்களை செழிப்படைய செய்து கொண்டே வங்கத்தாயின் மடியில் துயிலச் சென்றுவிடுகிறாள்.

காவிரி தாயின் தங்கை நல்லாள் தென்பெண்ணை என்ற நற்பெயருடைய நங்கை கன்னட நாட்டில் பிறந்து கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பன அள்ளி- கவேரிப்பட்டினம்- இருமத்தூர் வழியாக திருவண்ணாமலை மாவட்டங்களை செழிப்படைய செய்து கொண்டே அக்காள் காவேரி சென்ற இடத்திற்கே இவளும் சென்றடைகிறாள்.

தமிழகத்தின் பெருமப்குதியை செழிப்படைய செய்வது தகடூர் நாடே அதாவது தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டமே என்பது குறிப்பிடத்தக்கது. தான் செழிப்பாக வாழவில்லை என்றாலும் தமிழகத்தின் பெரும்பகுதியை வாழ வைப்பது நம் மாவட்டங்களே.! 


காவிரி மற்றும் தென்பெண்ணை ஆறு


தகடூர் என்ற பெயர் மட்டுமல்லாது நாகப்பட்டிணம் மாவட்டம், வேதாரண்யம் அருகே “தகட்டூர்” என்ற ஊரும் உள்ளது. 

நம்ம மாவட்டத்தின் பெயரைப்போலவே காஞ்சிபுரம் மாவட்டத்திலும் ஒரு ஊர் "தர்மாபுரி".


தர்மாபுரி - காஞ்சீபுரம் மாவட்டம். 

தமிழகத்தில் மட்டுமல்லாது தெலுங்கானாவில் கரீம் நகர் - தருமபுரி மற்றும் ஆந்திராவில் விசாகப்பட்டினம் - தருமபுரி என்ற ஊர் உள்ளது. இதே போலவே மகாராஷ்டிரா மாநிலத்திலும் தருமபுரி என்ற பெயரில் உள்ளது. 




தருமபுரி - கிருஷ்ணகிரி மாவட்டங்கள் என்றுமே தனிச்சிறப்புடன் இருந்துள்ளது. தற்போதுள்ள சிலர் இதை கொங்கு நாடு உடன் சேர்த்து கூறுகின்றனர். அனால் இந்த 2 மாவட்டங்களுடன் என்றுமே கொங்கு நாட்டுடன் அடங்காது. இங்குள்ள மக்களின் வாழ்க்கைமுறைகள், பேச்சுக்கள் இப்படி பலவற்றில் வேறுபடுகிறது. இது வரை கொங்கு என்ற வார்த்தையை எந்த கல்வெட்டிலோ, இலக்கியப்பாடலிலோ பார்த்தது இல்லை. இப்படி எந்தவித தொடர்பும் இல்லாத கொங்கு நாட்டுடன் எப்படி நாம் கூற முடியும். என்றுமே இவை தகடூர் நாடு தான் என்பதற்கான ஆதாரங்கள் நமக்கு ஓசூர் முதல் தொப்பூர் வரை கிடைக்கிறது. 

தகடூர் செழித்தால் தமிழகமும் செழிக்கும்..! 

_________________________________________________________________________